உடல் மற்றும் சர்ம ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பால்!

நமது அன்றாட அத்தியாவசிய தேவைகளில் ஒன்று பால். இது நமது உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் நமது சருமத்தை மேம்படுத்தி கொள்ளவும் பயன்படுத்தலாம். கொழுப்பு சத்து, கால்சியம் மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால் பால் நமது உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் நமது முகம் மற்றும் தலைமுடி பராமரிப்பிலும் பெரும் பங்கு வகிக்கிறது. பால் நமது முகத்தை மிருதுவாக சுருக்கங்கள் வராமல் பாதுகாப்பதோடு கூந்தலை வலுப்படுத்தவும் பயன்படும்.
இதில் இருக்கும் கால்சியம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்த மட்டுமல்லாமல் ஆரோக்கியமான தலைமுடி பெறுவதற்கும் அவசியமானது.இதில் இருக்கும் வைட்டமின் டி முடி உதிர்வதை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.
பருவ மாற்றம் , தண்ணீர் மாசடைதல் போன்ற காரணங்களால் நமது தலைமுடி வறண்டு போகக் கூடும். இது போன்ற பிரச்சனைகளுக்கு செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதை காட்டிலும் எளிதில் கிடைக்கக்கூடிய பால் போன்ற பொருட்கள் பயன்படுத்துவது நமக்கு எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும் பால் மசாஜ் குறித்து பார்க்கலாம். இதற்கு தேவைப்படும் பொருட்கள் வாழைப்பழம் மற்றும் பால். முதலில் வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டி அத்துடன் பால் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதை தலையில் சேர்த்து நன்கு மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ச்சியாக வாரம் இரண்டு முதல் மூன்று முறை செய்வதன் மூலம் மிருதுவான ஆரோக்கியமான தலைமுடியை பெறலாம்.
பால் மட்டுமல்லாமல் பால் ஆடை கூட சர்ம பராமரிப்பிற்கு உதவும். பாலாடை கொண்டு முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் முகம் பொலிவாக மற்றும் மிருதுவாக காணப்படும்.