அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு… முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். எனவே நாளை நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தலைநகர் சென்னை தொடங்கி பல்வேறு மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிகமாக மழைப் பதிவாகியுள்ளது. பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மேலும் வடகிழக்குப் பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆய்வுக் குழுவினர் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள சேதம் குறித்தும், நிவாரண நிதி அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை (19 -11 -2021) 5.00 மணியளவில் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதால், மேற்படி மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பணித்துள்ளார்கள். இதன் காரணமாக, நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, 20-11-2021, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *