ஓமைக்ரான் வைரஸ்… மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

ஓமைக்ரான் வைரஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24ம் தேதி முதன் முறையாக ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை எதிர்க்கும் திஉறன் கொண்டது என்பதாலும் ஓமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பலவும் தீவிர முன்னேச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தும் படி மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தொற்று கண்டறிதலை வேகப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஓமைக்ரான் பாதிப்பு காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர் ஆர்.டி.பி.சி.ஆர். மாதிரிகளை மரபியல் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அக்டோபர் 15 முதல் தற்போது வரை செய்யப்பட்ட மரபியல் பரிசோதனைகளை மீண்டும் மறு பரிசோதனைக்கு உட்படுத்தி ஓமைக்ரான் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஓரே இடத்தில் பல நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால் அவர்கள் அனைவரது மாதிரிகளையும் மரபியல் ஆய்வுக்கு உட்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *