இன்று மாலை குன்னூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு செல்கிறார்.

இன்று மதியம் 12.15 மணியளவில், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டரொன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருந்தது. முக்கிய ஆலோசனைக்கூட்டத்திற்காக பல உயர் ராணுவ அதிகாரிகள் இதில் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் பயணித்ததாக ராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. அவருடைய மனைவியும் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே, களநிலவரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது மீட்பு பணியை துரிதப்படுத்தவும், காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை வழங்கவும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்றொருபக்கம் தமிழ்நாடு அரசு சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுத்துறைச்செயலாளர் ஜகந்நாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில், மாலை 5 மணி அளவில் குன்னூருக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *