தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறி வருகிறது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய நிபுணர் குழுவினர் இரண்டாவது நாளாக இன்று ஆய்வு மேற்கொள்கின்றன. இந்நிலையில், சமூகப் பரவலாக ஒமைக்ரான் மாறி வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள 10 மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை ஒன்றியரசு அனுப்பிவைத்தது. இதன்படி, தமிழகத்துக்கு டாக்டர் வனிதா, பூர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ் பாபு ஆகியோர் வருகைதந்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இதனிடையே,இன்று தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனம், ஊட்டியில் உள்ள பாஸ்டர் நிறுவனம் ஆகியவற்றில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறினார்.தமிழகத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டிருப்பதாகவும், ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஒமைக்ரான் தொற்றை உறுதிசெய்ய தமிழகத்தில் உள்ள மரபியல் ஆய்வுக்கூடத்தை பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய குழுவினரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்து ஒமைக்ரான் ஏற்படுவது என்ற நிலைமாறி, சமூக பரவல் என்ற நிலையை எட்டியிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். முன்னதாக, சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில், 18 பேர் குணமடைந்திருப்பதாகவும், 16 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *