#BREAKING ஹிஜாப் விவகாரம்… கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப், காவி துண்டு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், கர்நாடக மாநிலம் குண்டபுராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதை எதிர்த்து இந்து, மாணவ மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் காவித்துண்டு போன்ற ஆடைகளை அணிந்துவந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் மாணவிகள், கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்றும், மீறி வந்தால் தனி அறையில் அமரவைக்கப்படுவார்கள் என்றும் கூறியது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
கர்நாடக மாநிலம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சனை வலுத்து வரும் நிலையில், ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று தனிநீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்பாக விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில் கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்திற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது இடைக்கால தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த தனி நீதிபதி, கர்நாடக அரசின் ஒரே சீருடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனக்கூறி, ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றத்தின் விரிவான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.