வாக்கு எண்ணிக்கை தாமதம்… அதிகாரிகளால் வெடித்த சிக்கல்!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிப்பும் வெளியாகி வருகிறது.

வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதால் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே சில மையங்களில் பிரச்சனைகள் வெடித்துள்ளது. கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 16 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கடலூரில் உள்ள புனித வளவனார் பள்ளி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவியை அதிகாரி மாற்றிக்கொண்டு வந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

அறையின் சீல்களை அகற்றிவிட்டு, பூட்டை திறக்க முயன்ற அதிகாரிகள் சாவி வேலை செய்யாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் தான் சரியான சாவி இல்லை என்பதும், சாவியை அதிகாரி மாற்றிக் கொண்டு வந்ததால் பதற்றம் நிலவியது.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டிகளின் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. வ.புதுப்பட்டி பேரூராட்சிக்கான தபால் பெட்டியின் சாவி இல்லாததால் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.