#BREAKING வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு செல்லாது… உச்ச நீதிமன்றம் அதிரடி!

வன்னியர் சமுதாயத்திற்கு தமிழ்நாடு அரசு கொடுத்த 10.5% இட ஒதுக்கீடு செல்லாது என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை உறுதிப்படுத்தி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இந்த சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மற்றும் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 15, 16-ம் தேதிகளில் நடந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை கடந்த மாதம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் படி வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் சாதிய ரீதியிலான உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை மாநில அரசுகள் சொல்ல வேண்டும். ஆனால் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் அதற்கான காரணம் எதுவும் சரியாக இல்லை என நாங்கள் கருதுகிறோம். அதனால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.