இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. இந்த கொடிய வைரஸால் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த தொற்றை கட்டுப்படுத்த போடப்பட்ட பொதுமுடக்கத்தால் மக்கள் உடலாலும், மனதாலும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தியதால் கொரோனாவின் கோர தாண்டவம் குறைய தொடங்கியது. ஆனால் கொரோனா முற்றிலும் அழிந்த பாடில்லை . வெவ்வேறு வகையில் உருமாறி மக்களை வாட்டி வதக்கி கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த மாதம் சீனாவில் கொரோனா 4வது அலை தொடங்கியது. கொரோனா எக்ஸ்-இ என்கிற வேரியண்ட் தான் இந்த முறை அங்கு பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதனால் சீனாவில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா XE வைரஸ் தொற்று மும்பையில் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரானின் துணை திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இத்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாக தெரிவித்த மும்பை மாநகராட்சி, இது 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது என எச்சரித்துள்ளது. இதனால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொற்று பரவலை முன்கூட்டியே தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்து வருகிறார்கள். மீண்டும் ஒரு முழு ஊரடங்கு வந்தால் இந்தியா பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.