பார்வதி அம்மாவுக்கு ரூ.10 லட்சம்… சூர்யா அதிரடி அறிவிப்பு!

Jaibhim

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இந்திய திரையுலகில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஜெய்பீம் படத்தை தயாரித்து நடித்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அதில் பொருளாதார ரீதியாக மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் அவரைப் போன்ற பழங்குடியின மக்களுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கே.பாலகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மதிப்புக்குரிய திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு….. வணக்கம். தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப்பெற்றேன்.

‘ஜெய்பீம் திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாரட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப் படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே. சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.

மேலும் மறைந்த திரு. ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், திரு. பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் ‘பத்து இலட்சம்’ ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும், அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.

மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு. ஆகவேதான் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள்.. எனக்குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *