சூர்யாவிற்கு வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ்… 7 நாட்கள் கெடு!

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்தற்காக நடிகர் சூர்யா 7 நாட்களுக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நட்சத்திர தம்பதி சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கிய திரைப்படம் ஜெய்பீம். இதில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பாராட்டுகளும், எதிர்ப்புகளும் நிலவி வருகின்றன.

குறிப்பாக வன்னியர் சமூகத்தை ஜெய்பீம் திரைப்படம் இழிவுபடுத்தியதாக தொடர் குற்றச்சாட்டுக்களும், கண்டனங்களும் எழுந்து வருகின்றனர். இது தொடர்பாக வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் சூர்யாவிற்கு கடிதம் மூலமாக தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். படத்தில் காடுவெட்டி குருவை அவமதிக்கும் நோக்கத்துடன் காவல் அதிகாரிக்கும் குருமூர்த்தி என பெயர் வைத்ததாகவும், வன்னியர்களின் சின்னமான அக்னி கலசத்தை காலண்டரில் காட்சிப்படுத்தியதாகவும் கண்டனங்கள் எழுந்தது.

இதற்காக சூர்யா மற்றும் படக்குழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென எதிர்ப்பு வலுத்துவந்தது. இந்நிலையில் ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *