பல வருடங்களுக்கு பிறகு இணைத்து நடிக்கும் சூர்யா-ஜோதிகா!

சூர்யாவும், ஜோதிகாவும் பேரழகன், பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். கடைசியாக 2006-ஆம் ஆண்டு வெளியான ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்கவில்லை.

ஜோதிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சூர்யாவையும் ஜோதிகாவையும் வைத்து படம் எடுக்க சில இயக்குனர்கள் முயன்றும் அது நடக்கவில்லை. நல்ல கதை அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்போம் என்று சூர்யா ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் சூர்யாவும் ஜோதிகாவும் 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், இந்த படத்தை பாலா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிக்கும் படத்தை பாலா இயக்குவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ஜோதிகா மீண்டும் இணைந்து நடிப்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.