சாதிவெறியர்களுக்கு சவுக்கடி கொடுக்கும்… ‘வாய்தா’ படம் பற்றி மு.ராமசாமி அதிரடி!

vaaitha

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் புதுமுகங்கள் என்றால் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என ஒருசிலர் இருப்பார்கள். ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ள படம் ‘வாய்தா’. அறிமுக இயக்குநர் மகிவர்மன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

vaaitha

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ‘வாய்தா’ படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார்.’ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம் இதுவரை 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில் இயக்குநர் மகிவர்மன், நடிகர் புகழ், மு.ராமசாமி, நடிகை ஜெசிகா பவுலின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் மகிவர்மன் பேசுகையில், ‘முதலில் இப்படத்திற்கு ‘ஏகாலி’ என்று பெயர் வைத்திருந்தேன். குறிப்பிட்ட சாதியினர் குறித்த பெயராக இருப்பதாகக்கூறி, அதற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர். பல்வேறு பிரச்னைகளைக் கடந்து தற்போது வாய்தாவாக இப்படம் வெளிவர உள்ளது’ என்றார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மு.ராமசாமி பேசுகையில், இன்றும் நாம் வாழும் சமூகத்தில் இப்படி ஒரு அவலங்கள் நடைபெறுகிறதே.. என்ற ஒரு ஆதங்கம் மனதுக்குள் எழும். அந்த அதிர்வை இந்த திரைப்படம் ஏற்படுத்தும். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என்னுடைய நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘வாய்தா’ திரைப்படம் வர்ணத்தையும் பேசுகிறது. வர்க்கத்தையும் பேசுகிறது. வர்ணாசிரம தர்மப்படி இந்த சமுதாயத்திற்குள் அழுத்தப்பட்டிருக்கும் வண்ணார் சமூகத்தின் நடவடிக்கைகள், வாழ்வியல் விசயங்கள் இதில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் சாதிய மதவாத ஆதிக்க சக்திகளின் குரல் ஓங்கி இருக்கும் நிலையில், இது போன்ற படைப்புகள் வரவேண்டும்.
மக்களின் மனதில் சில கேள்விகளை எழுப்பும். எழுப்ப வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். சமூகத்தின் கடைநிலையில் வாழும் எளிய மனிதன் சட்டத்தின்முன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை மிக நேர்த்தியாக இயக்குநர் மகி வர்மன் உருவாக்கியிருக்கிறார்.

இன்றைய திரை உலகில் ஏராளமான இளைஞர்கள் அறிமுகமாகி சினிமாவை ஒரு வலிமையான ஆயுதமாக பயன்படுத்தும் திராணியை பெற்றிருக்கிறார்கள். தற்போதைய சூழலில் தணிக்கை குழு மேலும் கடுமையாக்கப்பட்டிருக்கிறது எதிர்காலத்தில் வரும் படைப்பாளிகள் தங்கள் கருத்தினை வெளியிடுவதற்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஆனால் கடும் அழுத்தங்களையும் மீறி குறியீட்டுகளாலும், அழகியலோடும் கருத்துகளை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதனை வாய்தா படத்தின் மூலம் விதைத்திருக்கும் இயக்குனருக்கும், படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…