சித்ரா கழுத்தில் இருந்த காயம் எப்படி வந்தது?… புகைப்படத்துடன் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சித்ராவின் பெற்றோர் கூறியதாவது: ஹேம்நாத் இந்த வழக்கை திசை திருப்ப தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், ஏற்கனவே காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனவும், அப்போது சித்ராவின் உடலை காவல்துறையினர் எரிக்க கூறி வலியுறுத்தியதாகவும் காவல்துறையினர் அப்போது தங்களை மிரட்டியதாகவும், கூறினார்கள்.
தற்போது காவல்துறையினர் நியாயமான முறையில் மறுவிசாரணை நடத்த வேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர் வலியுறுத்தினர்.
ஹேம்நாத் கஞ்சா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், தற்போது தன் மகளைப் பற்றி தவறான தகவல்களை ஹேம்நாத் பரப்பி வருவதாகவும் சித்ராவின் தாயார் விஜயா கூறியுள்ளார்.
சித்ரா கழுத்தில் கடித்த தடயங்கள் இருப்பதாகவும், ஹேம்நாத் தான் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடி இருப்பதாகவும் சித்ராவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சித்ராவின் பெற்றோருக்கு மர்ம நபர்கள் மிரட்டல் கொடுப்பதாகவும், இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும் சித்ரா பெயரில் உள்ள வீட்டை அபகரிக்கவும் ஹேம்நாத் முயற்சித்து வருவதாக சித்ராவின் பெற்றோர் கூறியுள்ளனர்.
சித்ரா தற்கொலை செய்துகொண்ட இடத்தில் கஞ்சா பட்டத்தை கைப்பற்றி இருப்பதாக போலீசாருக்கு கூறியுள்ள நிலையில், கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்திற்கு ஹேமநாத் அடிமையாகி தன்னுடைய மகளை கொலை செய்து விட்டதாகவும், சித்ரா உயிரிழப்புக்கு வெள்ளைத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டதாகவும் சித்ராவின் பெற்றோர் கூறுகின்றனர்.
கடந்த ஆட்சியில் உரிய முறையில் காவல்துறை விசாரணை நடத்தவில்லை எனவும் தற்போது இதுகுறித்து முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் சித்ராவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.