இந்தியாவில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதா…

இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் செலவழிப்பு இதுவரை இல்லாத அளவாக கடந்த அக்டோபரில் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் அக்டோபர் மாதத்தில், அதாவது ஒரே மாதத்தில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவாக கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு செலவழித்திருக்கிறார்கள். இதை ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

2020 அக்டோபரில் கிரெடிட் கார்டில் இந்தியர்கள் செலவிட்ட தொகை 64,891 கோடி ரூபாய். இது 2021 அக்டோபரில் ஒரு லட்சம் கோடி ரூபாய். இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த செப்டம்பரில் 80,477 கோடி ரூபாயை இந்தியர்கள் செலவழித்திருந்தனர்.

கிரெடிட் கார்டு செலவழிப்பு உச்சத்தைத் தொட்ட மாதம், கொரோனாவுக்குப் பிந்தைய தளர்வுகள் அமலானது மட்டுமின்றி, தசரா, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலம். கிரெடிட் கார்டு செலவழிப்பு வரலாற்று உச்சத்தைத் தொட்டிருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டிருப்பதன் அடையாளம் என்கிறார், மோதிலால் ஆஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன துணைத் தலைவர் நிதின் அகர்வால்.

கொரோனாவுக்கு முந்தைய நிலையைவிட, கடந்த சில மாதங்களில் கிரெடிட் கார்டு செலவழிப்பு அதிகமாக இருப்பது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் தெரிய வந்திருக்கிறது. 

கிரெடிட் கார்டு செலவழிப்பு மட்டுமின்றி கடந்த செப்டம்பர் தொடங்கி 3 மாதங்களில் தனிநபர் கடனும், ரொக்கச் செலவழிப்பும் கணிசமாக உயர்ந்ததாக முன்னணி தனியார் வங்கிகளான எச்.டி.எஃப்.சி. ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.