விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் – நிர்மலா சீதாராமன்

ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கரன்சி அமையவுள்ளது. டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் டிஜிட்டல் கரன்சி என்றால் என்னவென்று பார்ப்போம்? இந்திய அரசால் வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சியைச் சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி என அழைக்கப்படுகிறது. இது ரூபாய் நோட்டு போலவே இந்திய அரசால் அறிமுகம் செய்யப்படும் டிஜிட்டல் பணம். இந்தப் பணத்தைத் தற்போது நாம் பயன்படுத்தும் வகையிலேயே பயன்படுத்தலாம், அதேபோல் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இயங்க கூடியவை. ஆனால் கிரிப்டோகரன்சி முற்றிலும் மாறுபட்டவை.டிஜிட்டல் கரன்சிக்கும், கிரிப்டோ கரன்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், டிஜிட்டல் கரன்சியை அரசாங்கம் கட்டுப்படுத்தும். மேலும் அதற்கென்று தனி நிதிகோட்பாடும் உண்டு. ஆனால் கிரிப்டோகரன்சி இதிலிருந்து முற்றிலுமாக மாறும். கிரிப்டோகரன்சி என்பது பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும். இதனை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தச் செய்தி படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் உங்கள் வீட்டில் சில கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்க முடியும். இது முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் வர்த்தகச் சந்தைக்கு வருபவை.