பாகிஸ்தானை பந்தாடிய ஆஸ்திரேலியா..!

உலக கோப்பை டி20 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களம் கண்டனர். இருவரும் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பாகிஸ்தான் தனது முதல் விக்கெட்டை 71 ரன்களில் இழந்தது. கேப்டன் பாபர் அசாம் 39 ரன்களில் ஆடம் ஸம்பா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய சமான் சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 52 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அலி 0 ரன்னிலும், மாலிக் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மார்ஷ் மற்றும் வார்னர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மார்ஷ் 28 ரன்களில் சதாப் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆஸ்திரேலியா அணி 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டேவிட் வார்னர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் மற்றும் மார்க் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி போட்டியை ஆஸ்திரேலியாவின் பக்கம் திருப்பினர். அதிரடியாக விளையாடிய ஸ்டோனிஸ் 31 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் அபாரமாக விளையாடிய மேத்யூ வேட் வெறும் 17 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 6 பந்துகள் மீதம் இருக்க பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதிரடியாக விளையாடிய மேத்யூ வேட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *