இந்திய அணி அபார வெற்றி..!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. மூன்று டி20 போட்டிகளில் முதல் போட்டி நேற்று ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள சவார் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சினைத் தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மற்றும் மார்டின் கப்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால், தொடக்க ஆட்டக்காரர் டேரி மிட்செல் புவனேஸ்குமார் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதனையடுத்து, களமிறங்கிய மார்க் சாப்மேன், மார்டின் கப்டிலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய மார்டின் கப்டில் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். மார்க் சாப்மேன் 50 பந்துகளை சந்தித்து 63 ரன்கள் குவித்தார்.

அதன்பின்னர் களம் கண்ட கிளென் பிலிப்ஸ் 0 ரன்னிலும், டிம் 12 ரன்களிலும், ரச்சீன் ரவீந்திரா 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைக் குவித்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 15 ரன்களில் மிட்செல் சாண்ட்னர் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் சூர்யகுமார் யாதவ். இருவரும் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கையில் டிரெண்ட் போல்ட் வீசிய பந்தில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். டிரெண்ட் போல்ட் வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின்னர், விளையாடிய ரிஷ்ப் பண்ட் 17 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது போட்டி நாளை ஜார்க்கண்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *