பந்து வீச்சை தேர்வு செய்த இலங்கை அணி..!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் முதல் போட்டி இன்று எக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்கள் பலர் இலங்கைக்கு எதிரான இந்த டி20 தொடரில் பங்கேற்க வில்லை. சிலர் காயம் காரணமாக விளையாடவில்லை. அதேபோல, ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக ருத்ராஜ் கெய்க்வாட், தீபக் சஹர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக அணியில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.