இந்திய அணி அபார வெற்றி..!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். இந்த ஜோடி இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்துத் தந்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 32 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும்.
இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
இதன் மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே போல்டு ஆகி வெளியேறினார். இதனால் இலங்கை அணிக்கு தொடக்கமே பேரிடியாக அமைந்தது. இதனையடுத்து மற்றொரு தொடக்க வீரர் உடன் ஜோடி சேர்ந்தார் லியானாகே. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மிசாரா 13 ரன்களிலும், லியானாகே 11 கரங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இலங்கை அணியின் சார்பில் நிதானமாக விளையாடிய அசலங்கா அரை சதம் அடித்தார். பின்வரிசையில் களமிறங்கிய கருணாரத்னே மற்றும் சமீரா அதிரடியாக விளையாடிய போதிலும் அணியின் வெற்றிக்கு அது போதுமானதாக இல்லை. இறுதியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.