மார்ச் 26 இல் தொடங்கும் 15-வது ஐபிஎல் சீசன்..!

ஐபிஎல் 15-வது சீசன் வருகிற மார்ச் 26 இல் தொடங்கி மே மாதம் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ஐபிஎல் போட்டிகள் நடத்தும் நிர்வாகக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 15 வது சீசன் லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனேவில் நடைபெற உள்ளது.

மொத்தமாக 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த ஐபிஎல் தொடரின் ஆட்டங்கள் மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கான போட்டிகள் எங்கு நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் 20 போட்டிகளும், மும்பையில் உள்ள மற்றொரு ஸ்டேடியமான பிரபோர்னேவில் 15 போட்டிகள் நடைபெற உள்ளன.

அதேபோல மும்பையின் டி ஒய் பட்டேல் மைதானத்தில் 20 போட்டிகளும், புனேவில் உள்ள எம் சி ஏ சர்வதேச மைதானத்தில் 15 போட்டிகளும் நடைபெற உள்ளன. ஐபிஎல் போட்டிகளில் உள்ள 10 அணிகளும் மொத்தமாக 14 லீக் போட்டிகளில் மோதவுள்ளன. அதனைத் தொடர்ந்து 4 பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும்.

மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எந்த குரூப்பில் எந்த அணி இடம்பெற்றுள்ளது என்ற விவரங்கள் பின்வருமாறு,

குரூப் ஏ: மும்பை இந்தியன்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

குரூப் பி: சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்.

Leave a Reply

Your email address will not be published.