கிரிக்கெட் அகாடமி தொடங்கும் சிஎஸ்கே..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிதாக சூப்பர் கிங்ஸ் அகாடமி என்ற பயிற்சி மையத்தை தொடங்க உள்ளது. இதனை அந்த அணியின் உரிமையாளர் கே.எஸ்.விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சூப்பர் கிங்ஸ் அகாடமி இரண்டு மையங்களுடன் தொடங்க உள்ளது. அதில் ஒன்று சென்னையிலும் மற்றொன்று சேலத்திலும் அமைய உள்ளது. இந்த சூப்பர் கிங்ஸ் அகாடமியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல் இரண்டு இடங்களில் தொடங்கப்படும் இந்த மையம் பின்னாளில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் சென்னையில் துரைப்பாக்கத்தில் அமைய உள்ளது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது, நாங்கள் கடந்த 50 ஆண்டுகளாக கிரிக்கெட் துறையில் இருந்து வருகிறோம். கிரிக்கெட் விளையாட்டிற்கு பல்வேறு திறமையானவர்களை உருவாக்கியுள்ளோம். எங்களது இந்த முயற்சி அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த அகாடமி ஆண் பெண் என இருபாலருக்கும் பயிற்சி அளிக்க உள்ளது. சேலத்தில் அமைந்துள்ள அகாடமி 16 ஏக்கர் பரப்பில் அமைய உள்ளது என்றார்.

இந்த புதிய முயற்சி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது, என்னைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த இந்த முடிவு சிறப்பான முடிவாகும். இந்த முயற்சியின் மூலம் பல்வேறு இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்கு இந்த பயிற்சி அகாடமி உறுதுணையாக இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.