இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று பஞ்சாபில் உள்ள PCAS கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 357 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக தொடக்கத்தை ஏற்படுத்தினாலும் ரோகித் சர்மா 29 ரன்களிலும், மயங்க் அகர்வால் 33 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி மற்றும் விராட் கோலி இணை நிதானமாக இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக ஆடிய ஹனுமா விஹாரி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் அவர் சதம் அடிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் துரதிஸ்டவசமாக 45 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன்பின் இந்திய அணியின் இளம் வீரரான ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயஸ் ஐயர் 27 ரன்களிலும் ஆட்டம் இருந்த போதிலும், ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி மைதானத்தின் நாலா புறங்களிலும் பந்துகளை பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய அவர் நான்கு ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 97 பந்துகளை சந்தித்த அவர் 96 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும்.

ரிஷப் பண்ட் உடன் மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரவீந்திரன ஜடேஜா 82 பந்துகளில் 45 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். அவருடன் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.