100-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி விளையாடும் நூறாவது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் விராட் கோலி 45 ரன்கள் எடுத்து அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோகித் சர்மா கேப்டனாக தனது முதல் போட்டியில் இன்று களமிறங்கினார். அதேபோல தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் களம் கண்டார் விராட் கோலி. போட்டியை அதிரடியாக தொடங்கிய ரோகித் சர்மா துரதிஷ்டவசமாக 29 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, ஹனுமா விஹாரி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக இந்திய அணிக்கு ரன்களை சேர்க்கத் தொடங்கியது. நிதானமாக விளையாடிய ஹனுமா விஹாரி அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். இன்று 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மீது ரசிகர்கள் சதம் அடிப்பார் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய அவர் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் லசித் விரித்த வலையில் விழுந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 76 பந்துகளை எதிர்கொண்ட அவர் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி இந்த போட்டியில் சதம் அடிக்கவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை அவர் இன்று படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் அவர். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.