கனத்த இதயத்துடன் ஓய்வை அறிவிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்..!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்ரீசாந்த் இன்று அனைத்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 53 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும், 10 t20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்திய அணியின் ஆக்ரோஷமான பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

என்னுடைய குடும்பத்திற்காக , சக வீரர்களுக்காக மற்றும் என்னுடைய நாட்டிற்காக விளையாடியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் மிகுந்த வருத்தத்துடன் ஓய்வு பெறுகிறேன். ஆனால், இந்த முடிவு குறித்து நான் வருந்தப் போவதில்லை. கனத்த இதயத்துடன் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அடுத்த இளைய தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்காக நான் என்னுடைய இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவு ஆகும் என்றார்.

27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைய வில்லை. வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இருப்பினும், அவரால் அவருடைய பழைய இடத்தை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்விற்கு இன்று அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.