முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 4 ரன்களிலும், ரோகித் சர்மா 15 ரன்களிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி மற்றும் விராட் கோலி சிறிது நிதானமாக விளையாடினர். இருப்பினும் ஹனுமா விஹாரி 31 ரன்களிலும், விராட் கோலி 21 ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினாலும் அவர் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் இவ்வாறு இந்திய அணி விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்து தடுமாற மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து வர ஸ்ரேயாஸ் ஐயர் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அதிரடியாக ஆடிய அவர் 98 பந்துகளில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 252 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

இலங்கை அணியின் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சுழல் பந்துவீச்சாளர்கள் எம்புல்டேனியா மற்றும் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். தற்போது இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை அணி இடைவேளைக்கு பிறகு தனது முதல் இன்னிங்சில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.