இரண்டாவது டெஸ்டில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா..!

இந்தியா இலங்கை இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். மயங்க் அகர்வால் துரதிர்ஷ்டவசமாக 4 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ஹனுமா விஹாரி 31 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சிறிது நிதானம் காட்டினாலும் அவரும் 23 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி பந்தினை அவ்வப்போது பவுண்டரிக்கு விரட்டினார். அதிரடியாக ஆடிய அவர் 39 ரன்களில் எம்புல்டேனியா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், இந்திய அணி 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
களத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும், ரவீந்திர ஜடேஜாவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.