டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்..!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக அரைசதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் சாதனையை இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று இலங்கை அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் வெறும் 28 பந்துகளில் அதிரடியாக அரை சதம் விளாசி அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் கபில் தேவ் (30 பந்துகள்), ஷர்துல் தாக்கூர் (31 பந்துகள்), சேவாக் (32 பந்துகள்) ஆகியோர் அதிவேக அரைசதத்தை பதிவு செய்துள்ளனர்.
அதே போல இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசியவர்களில் ஷகீத் அஃப்ரிடிக்கு அடுத்ததாக பண்ட் உள்ளார். அஃப்ரிடி 26 பந்துகளில் அரைசதம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.