பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக தேர்வான இந்திய அணியின் இளம் வீரர்..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்தவகையில் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். இதனை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான ஷ்ரேயஸ் ஐயர் தனது அபார திறனை அண்மை காலமாக வெளிப்படுத்தி வருகிறார்.
அவர் கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 80 மற்றும் 25 ரன்களை எடுத்திருந்தார். மேலும், இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 57, 74 மற்றும் 73 என தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை விளாசியிருந்தார். அதன் மூலம் இந்த விருதை வென்றுள்ளார்.
இந்த விருதுக்கான பரிந்துரையிலிருந்த அமீரக வீரர் அரவிந்த் மற்றும் நேபாள வீரர் தீபேந்திரா சிங் ஆகியோரை முந்தியுள்ளார் ஷ்ரேயஸ். மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் அமெலியா கெர் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.