விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா..!

ஐசிசி அண்மையில் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் ஆகியோருக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா.

டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் முதல் இடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் 54-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக முதல் ஐந்து இடங்களில் இருந்து வந்த விராட் கோலி தற்போது 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 10-வது இடத்தில் உள்ளார். அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 2-வது இடத்தில் நீடிக்கிறார். 3-வது இடத்தில் தென்னாபிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா உள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் முதல் இடம் பிடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும் அஸ்வின் 3-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.