2022 ஐபிஎல் குறித்து மனம் திறக்கும் ரிக்கி பாண்டிங்..!

இந்த ஆண்டு ஐபிஎல் 15-ஆவது சீசன் வருகிற மார்ச் 26 முதல் தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஐபிஎல் 2022 குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சிறப்பாக அமைய உள்ளன. இன்று என்னுடைய முதல் பயிற்சியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்களுடன் தொடங்கினேன். மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. டெல்லி அணி வீரர்கள் இடத்தில் நேர்மறையான எண்ணங்கள் நிரம்பி காணப்படுவதை என்னால் பார்க்க முடிகிறது. இந்த அணி ஒரு இளம் நட்சத்திர பட்டாளமாக அமைந்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் நிறைய புதுமுகங்கள் உள்ளன. அவர்களிடத்தில் மிகுந்த ஆற்றலை என்னால் பார்க்க முடிகிறது. எங்களைப் பொருத்தவரை எங்களது உடனடி லட்சியம் முதல் போட்டியில் கவனம் செலுத்துவதே என்றார்.
ஐபிஎல் 15-வது சீசனின் முதல் போட்டி வருகிற மார்ச் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.