அக்சர் பட்டேல் அதிரடியில் டெல்லி கேப்பிடல்ஸ் அசத்தல் வெற்றி..!

அக்சர் பட்டேல் அதிரடியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

முன்னதாக, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 81 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் செய்ஃபர்ட் களமிறங்கினர். அந்த ஜோடி அதிரடியான தொடக்கத்தை அமைத்தது. இருப்பினும், பிரித்வி ஷா 38 ரன்களிலும், செய்ஃபர்ட் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய மன்தீப் சிங் 0 ரன்னிலும், கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

அதன்பின், டெல்லி அணியின் வீரர் பவல் 0 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், அதன்பின் ஜோடி சேர்ந்த லலித் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் மும்பை அணியின் வெற்றி கனவை தவிடு பொடியாக்கினர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

குறிப்பாக, அக்சர் பட்டேல் 17-வது ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாச ஆட்டம் டெல்லியின் பக்கம் திரும்பியது. அதன்பின் வெற்றிக்கு ஒரு சில ரன்களே தேவைப்பட்ட நிலையில் அக்சர் படேல் பந்தை பவுண்டரிக்கு அடித்து டெல்லி அணிக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தார்.

அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் வெறும் 17 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். அதில், இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published.