முதல் போட்டியில் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..!

ஐபிஎல் 15-வது சீசன் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே களம் இறங்கினார். சென்னை அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான ருத்ராஜ் 0 ரன்னிலும், டேவான் கான்வே 3 ரன்களிலும் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திரா சிங் தோனி மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

17-வது ஓவரின் இறுதிவரை பொறுமை காத்த மகேந்திர சிங் தோனி அதன்பின் அதிரடியை காட்டத் தொடங்கினார். அதிரடியாக விளையாடிய அவர் 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். தோனியின் இந்த அரை சதத்தால் சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 131 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அந்த அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறி கொடுத்த போதிலும் 18.3 ஓவர்களில் இலக்கைத் துரத்தி பிடித்து வெற்றி பெற்றனர். அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அஜிங்கிய ரஹானே 44 ரன்கள் குவித்தார்.

நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *