லக்னோவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி..!

ஐபிஎல் 15-வது சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்த சீசனில் புதிதாக உருவாகியுள்ள இரண்டு அணிகளும் பலப்பரிட்சை நடத்தின. நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது.

மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். முகமது சமி வீசிய முதல் பந்திலேயே கேப்டன் கே எல் ராகுல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின் டி-காக் 7 ரன்களிலும், லீவிஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய மனிஷ் பாண்டேவும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனால் லக்னோ அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் பதோனி அணிக்கு ரன் குவிக்கும் முயற்சியில் இறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினார். தீபக் ஹூடா 55 ரன்களிலும், பதோனி 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ். லக்னோ அணியை போலவே குஜராத் அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய விஜய் சங்கர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடினர். இருப்பினும், மேத்யூ வேட் 30 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி 5 ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 60 ரன்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டது. இந்த சூழலில் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவாடியா தங்களது அபார ஆட்டத்தால் போட்டியை குஜராத்தின் பக்கம் திருப்பினர். சிறப்பாக விளையாடிய இருவரும் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியை தேடித் தந்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவாடியா 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.

குஜராத் அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4 ஓவர்கள் வீசிய அவர் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *