முதல் வெற்றியை பதிவு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு..!

ஐபிஎல் 15 வது சீசனின் 6-வது லீக் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டு பிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

முன்னதாக, டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முதல் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். ரஹானே 9 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். ஆட்டத்தின் இறுதியில் ஆண்ரே ரசல் அதிரடியாக 25 ரன்கள் குவிக்க அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது பெங்களூரு அணி. முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் குவித்த டு பிளிசிஸ் இந்தப் போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ரவாத் 0 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் வில்லி மற்றும் ரூதர்போர்ட் இணை விக்கெட்டை இழக்காமல் நிதானமாக விளையாடியது. இருப்பினும், டேவிட் வில்லி 18 ரன்களிலும், ரூதர்போர்ட் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர் சபாஷ் அகமது அதிரடியாக 3 சிக்சர்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை சற்று மாற்றினார். கொல்கத்தா அணி வெற்றி பெறுமா அல்லது பெங்களூரு அணி வெற்றி பெறுமா என்ற பரபரப்பு கடைசி வரை நீடித்தது. இறுதியில் தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 14 ரன்கள் குவித்து ஆட்டத்தினை பெங்களூர் அணிக்கு சாதகமாக முடித்து வைத்தார். இதன் மூலம் இந்த சீசனில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நான்கு ஓவர்களை வீசிய அவர் வெறும் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.