தோல்வியே துணை… தோல்வியின் பிடியில் சென்னை சூப்பர் கிங்ஸ்..!

ஐபிஎல் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ந்து 3-வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அதேபோல சென்னை அணியின் நிர்வாகமும் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் சில மாற்றங்களை அணியில் கொண்டு வந்தது. சென்னை அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி ஜடேஜாவுக்கு அந்த பொறுப்பை வழங்கினார். இதனால்,சென்னை அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருந்தனர்.

ரசிகர்களின் நம்பிக்கைக்கு மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. முதல் போட்டியில் வீரர்களின் மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இரண்டாவது போட்டியில் 210 அடித்தும் பந்துவீச்சு சிறப்பாக இல்லாததால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. முதல் இரண்டு போட்டிகளிலும் டாஸ் எதிரணிக்கு சாதகமாக அமைந்தது. அதுவும்கூட தோல்விக்கு காரணம் என பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் டாஸ் சென்னை அணிக்கு சாதகமாக அமைந்தது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினால் வெற்றி பெற முடியவில்லை.

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து தடுமாறி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. உண்மையில் அணியின் தோல்விக்கு என்ன காரணம். டாஸ் விழவில்லை என்பதை காரணமாக கூற முடியாது. ஏனென்றால், நேற்றைய போட்டியில் டாஸ் சென்னைக்கு சாதகமாகவே அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் சென்னையை தங்களது தவறுகளை சரி செய்து கொண்டு வெற்றி பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *