கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் முடிவுகள் : மம்தாவுக்கு அபார வெற்றி !

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குச்சாவடி முகவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், வேட்பாளர்கள் தாக்கப்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸின் தொண்டர்களால் வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாகவும் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் புகார்களை முன்வைத்தனர். இதனிடையே ஆங்காங்கே கலவரமும் வெடித்தது. 200க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 

உள்ளாட்சி அமைப்புக்கு மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் நேற்று பல்வேறு இடங்களில் தனித்தனியாக போராட்டம் நடத்தின. பாஜகவும் சிபிஎம் கட்சியும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு டிசம்பர் 23 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் மொத்தமுள்ள 144 இடங்களில் 134 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலா இரண்டு இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.திரிணாமுல் காங்கிரஸ் 74 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. சிபிஎம் 9.1 சதவீத வாக்குகளையும் பாஜக 8 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற ஏழு மாதங்களுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. சட்டமன்றத்தேர்தலில் பாஜகவின் வலுவான சவாலையும் மீறி 294 இடங்களில் 213 இடங்களை கைப்பற்றியது.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் “தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றியுணர்வுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *