சீக்கியர்களை கொன்று குவித்தது காங்கிரஸ்…பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

இந்தியாவில் பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனையடுத்து, முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாபில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைமையிலான அரசு சீக்கியர்களைக் கொன்று குவித்தது. ஆனால், பாஜக அவர்களுடன் எப்போதும் துணை நிற்கிறது என்றார்.
இன்று பஞ்சாவின் லூதியானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இவ்வாறு குற்றம் சாட்டினார். காங்கிரஸ் சீக்கியர்களை வஞ்சித்தது. ஆனால், பாஜக தலைமையிலான அரசு சீக்கியர்கள் மீதான அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தது. காங்கிரஸ் அரசு இந்தியாவில் கர்த்தார்பூர் அமைவதை கூட விரும்பவில்லை. ஆனால், பாஜக தலைமையிலான அரசு கர்தார்பூர் வழித்தடம் ஏற்படுத்தி சீக்கியர்களுக்கு துணை நிற்கிறது என்று அவர் தெரிவித்தார்.
சிலர் தங்களது அதிகாரங்களை தங்களின் நலனுக்காகவும், அதிகாரம் இருப்பதை வெளிக்காட்டவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால்,நாங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதையே செய்து வருகிறோம் என்றார்.
பஞ்சாப் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.