பாஜகவின் பொய்கள் தரை இறங்காது… அகிலேஷ் யாதவ் பேச்சு..!

உத்திரப்பிரதேச தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரப்படுத்தியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவை ஆதரித்து நேற்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேசத்தில் மம்தா பானர்ஜி உடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அகிலேஷ் யாதவ் பாஜகவின் பொய்கள் தரை இறங்காது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் பிஜ்நோர் தொகுதியில் நேரடியாக மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரச்சாரத்தினை மோசமான வானிலை காரணமாக தவிர்த்ததாக தெரிகிறது. இதனை விமர்சித்துப் பேசிய அகிலேஷ் யாதவ் கூறியதாவது, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்துள்ளார். மோசமான வானிலை தொடர்பான எந்த ஒரு பிரச்சினையும் அவருக்கு ஏற்படவில்லை. ஆனால், டெல்லியிலிருந்து உத்தர பிரதேசம் வர இருந்த பிரதமர் மோசமான வானிலை நிலவுவதாக காரணம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எவ்வளவோ முயன்றும் அங்கு அவர்களால் மம்தா பானர்ஜி அவர்களை எதிர்த்து வெல்ல முடியவில்லை. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அவர்களுக்கும் அதே நிலை ஏற்படும். மோசமான வானிலை காரணமாக விமானம் தரை இறங்க முடியாது என கூறும் பிரதமருக்கு நான் கூறுவது என்னவென்றால் பாஜகவின் பொய்களும் உத்தரப்பிரதேசத்தில் தரை இறங்க முடியாது என்பதாகும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.