எனக்குனே வருவீங்களா…. தவறான பணத்தில் சரியான வீடு கட்டிய நபர்

கடந்த 2013-ம் ஆண்டு சட்டிஸ்கர் மாநில சட்டமன்ற மன்ற தேர்தலின் போது நடந்த பிரச்சார கூட்டத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் போடப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.அந்த வாக்குறுதி தான் தற்போது நரேந்திர மோடிக்கு வினையாக மாறியுள்ளது.
2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதலே, வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாய் எப்போது என்ற விவாதங்கள் எழுவது உண்டு. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே ஞானேஸ்வர் என்ற விவசாயியின் ஜன்தன் வங்கிக் கணக்கில் திடீரென 15 லட்ச ரூபாய் பணம் வந்துள்ளது. இந்த பணமானது பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் அளித்தது என்று நினைத்து அவர் மிகவும் ஆனந்தம் அடைந்துள்ளார் . பின்னர் அந்த பணத்தில் 9 லட்ச ரூபாயை எடுத்து அவரது கனவு வீட்டையும் கட்டி முடித்து விட்டார். ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டு விட்டதாகக் கூறி பணத்தை திருப்பிச் செலுத்துமாறு வங்கி நோட்டீஸ் அனுப்பவே ஞானேஸ்வர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
வங்கி கணக்கை சரிபார்த்த போது ரூ.15 லட்ச ரூபாய் வந்திருந்தது. கிராமத்தில் கேட்ட போது, பிரதமர் மோடி போட்ட காசு என்று பலரும் கூறினர். சில நாட்கள் கழித்து பணத்தை எடுத்து வீடு கட்டி விட்டேன். இப்போது வந்து வங்கி அதிகாரிகள் பணத்தை திருப்பிக் கேட்டால் நான் என்ன செய்வேன்?
ஊராட்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை தவறுதலாக விவசாயி வங்கிக் கணக்கில் பேங்க் ஆப் பரோடா வங்கி வரவு வைத்ததே பிரச்னைக்குக் காரணம். கையில் இருந்த 6 லட்ச ரூபாயை உடனே திருப்பிச் செலுத்திவிட்ட ஞானேஷ்வர், வீடு கட்டுவதற்கு செலவழித்துவிட்ட 9 லட்ச ரூபாயை மீண்டும் எப்படி திரட்டுவது என்று தெரியாமல் விழிக்கிறார்.