ஊழலை ஒழிக்க பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்… பாதுகாப்புத்துறை அமைச்சர் பேச்சு..!

மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலத்தில் ஊழலை ஒழிக்க பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என பேசியுள்ளார். ஊழலை ஒழித்து மாநிலத்தில் நல்ல ஆட்சியை கொடுக்க பாஜக வெற்றி பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் லங்தாபால் என்னுமிடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் உள்ள பாஜக அமைச்சர்கள் மீது ஒருவர் கூட ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாது. மக்களுக்கு பணி செய்வதையே நாங்கள் எங்களது நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதனையே மணிப்பூர் மாநிலத்திலும் தர விரும்புகிறோம் என்றார்.
மேலும் பேசிய அவர், மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலம் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. பாஜக ஆட்சியின் கீழ் மணிப்பூரில் ரயில்,சாலை மற்றும் விமான போக்குவரத்து ஆகியவை வளர்ச்சி அடைந்துள்ளன என்றார்.
மணிப்பூர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டமாக வருகிற பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.