தீவிரவாதிகளுக்கு இடம் கொடுக்கும் சமாஜ்வாதி கட்சி… யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு..!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி கட்சியில் தீவிரவாதிகளுக்கு இடம் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர்களுக்கு தேசப் பாதுகாப்பின் மீது எந்த அக்கறையும் இல்லை எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு கட்சியினரும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக லக்கிம்பூர் தொகுதியில் இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் இதனை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் கூறியிருப்பதாவது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட 38 பேரை கைது செய்ய உத்தரவிட்டது அகமதாபாத் நீதிமன்றம். கைதானவர்களில் ஒருவர் தான் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் என ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து சமாஜ்வாதி கட்சி தீவிரவாதிகளுக்கு இடம் அளிப்பதாக முதல்வர் குற்றம் சாட்டினார். மேலும், அகிலேஷ் யாதவ் இன்னும் இதற்கு விளக்கம் அளிக்க வில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தீவிரவாதிகளுக்கு துணை போகும் சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்றார். உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியின் கீழ் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாநிலம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றார்.

சமாஜ்வாதி கட்சி மக்களுக்காக இலவச மின்சாரம் கொடுக்கப் போகிறோம் என கூறுவதெல்லாம் பொய் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் மக்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

தடுப்பூசி குறித்து பேசிய அவர், மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், சிலர் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இவ்வாறு தவறான தகவல்கள் பரப்புபவர்களுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான். உங்களது பொய்யான பரப்புரை எங்களை எதுவும் செய்யாது. மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதால் தான் நாம் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம் என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த கட்ட தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *