பாஜக பணக்காரர்களுக்காக செயல்படுகிறது… அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு..!

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜக பணக்காரர்களுக்காக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அண்மையில் நடைபெற்ற ஏபிஜி குரூப் வங்கி மோசடியை மேற்கோள்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். மேலும், அரசாங்கம் ஏழைகளுக்காக செயல்படாமல் பணக்கார முதலாளிகளுக்காக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். வங்கிகளில் ஏழை எளிய மக்களுக்கு கடன் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆனால், பெரிய நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க வங்கிகள் தாமாக முன் வருகின்றன.
இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர் பேசியதாவது, இந்த சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்கும். மாநிலத்தில் சாலைகளில் செல்லும் யாரேனும் ஒருவரிடம் இந்த தேர்தலில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று கேட்டால், அவர்கள் கூறும் பதில் சமாஜ்வாதி கட்சி ஆகத்தான் இருக்கும் என்றார். யோகி ஆதித்யநாத் இளைஞர்களுக்கு ஒரு கோடி மொபைல் போன்கள் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், அது உண்மை இல்லை என்றார். தேர்தலில் ஜெயிப்பதற்காக பாஜக என்ன வேண்டுமானாலும் கூறும் எனவும் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் நான்காம் கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி 23 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.