‘பாரத் பே’ நிறுவனர் ராஜினாமா; மன வருத்தத்துடன் முதலீட்டாளர்களிடம் இருந்து விடைபெற்றார்!

தனது சொந்த நிறுவனமான பாரத் பே-யில் இருந்து அஷ்னீர் குரோவர் ராஜினாமா செய்திருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரத்பேயின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான அஷ்னீர் குரோவர், மார்ச் 1ஆம் தேதி நள்ளிரவில் நிறுவனத்திற்கு திடீரென தனது ராஜினாமா மெயிலை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஒரு ஆடியோ கிளிப் அஷ்னீர் குரோவரை பெரும் பிரச்சனையில் தள்ளியது. அதில் கோடக் மஹிந்திரா வங்கி ஊழியரிடம் குரோவர் தவறாக பேசியதாக பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனால் அவர் நிறுவிய பாரத் பே நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதுதொடர்பான விசாரணையின் விளைவாக அவரது மனைவி மாதுரி ஜெயின் குரோவர் கடந்த வாரம் பாரத்பேயில் இருந்து நீக்கப்பட்டார். அல்வாரெஸ் & மார்சல் நடத்திய விசாரணை இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரோவர் தனது மின்னஞ்சலில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களால், நிறுவனத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும், எனவே தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று தனது முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு எதிராக தனித்து போராடி வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள அர்னீஷ் குரோவர், துரதிர்ஷ்டவசமாக, இந்தப் போராட்டத்தில் நிர்வாகம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என சாடியுள்ளார்.
குரோவர் தன்னை விசாரணைக்கு உட்படுத்திய முதலீட்டாளர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். நீங்கள் உங்களுடைய நிறுவனரையே வேண்டாம் என ஒதுக்கிவிட்டீர்கள். உங்களைப் பொறுத்தவரை, இந்த நிறுவனத்தின் நிறுவனர் தேவைப்படும்போது ஒரு பட்டனை அழுத்தினால் போதும், அப்போதும் நான் உங்களுக்காக சக மனிதனாக வந்து நிற்பேன். நீங்கள் வெளிப்படையாக பேசுவதற்கு பதிலாக என் மீது வதந்திகளை பரப்புகிறீர்கள்” என கடுமையாக சாடியுள்ளார்.
“அடிப்படை உண்மை என்னவென்றால், முதலீட்டாளர்களாகிய நீங்கள் அனைவரும் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள், உண்மையான வணிகங்கள் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள், மேலும் இந்த நிறுவனத்தை நாள்தோறும் நடத்துவதற்கு என்ன தேவைப்பட்டது என்பதைப் பற்றி நீங்கள் பாராட்டவில்லை” என குரோவர் தனது மெயிலில் குறிப்பிட்டுள்ளார்.
2.85 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளுடன் பாரத்பேயின் மிகப்பெரிய பங்குதாரராக குரோவர் இருக்கிறார். அவர் முன்பு தனது பங்குகளை விற்க முன்வந்தார், ஆனால் முதலீட்டாளர்கள் தற்போது அவர் வைத்துள்ள மதிப்பை ஏற்க மறுத்துவிட்டனர்.