நாங்க விலகி இருக்க ரெடி… காந்தி குடும்பம் அறிவிப்பு..!

நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அதனால், 5 மாநில தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து தங்களது குடும்பம் சற்று விலகியிருக்க தயார் என சோனியா காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. சுமார் 5 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, செயற்குழு விரும்பினால், கட்சியின் செயல்பாடுகளிலிருந்து தாமும் ராகுல் மற்றும் பிரியங்காவும் சற்று விலகியிருக்க தயார் என சோனியா காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரது இந்த முடிவை நிராகரித்த மூத்த நிர்வாகிகள், கட்சியை சோனியா காந்தியே வழிநடத்தவும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியை சோனியா காந்தி வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்ட போதிலும் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியை அறிவிக்குமாறு, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.