உத்தரகண்ட் முதல்வர் யாரென இன்று அறிவிக்கப்படும்..!

இந்த ஆண்டு உத்திரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக நான்கு மாநிலங்களிலும், ஆம் ஆத்மியின் ஒரு மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் ஒன்றான உத்தரகண்டில் இன்று முதல்வர் யாரென அறிவிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உத்ரகண்ட் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழா டேராடூனில் நடைபெற உள்ளது. இவ்விழாவின் போது யார் உத்தரகண்டில் முதல்வராக வரப்போகிறார் என்பது அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் மதன் கௌசிக் கூறியதாவது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று காலை 11 மணிக்கு விதான் சபாவில் பதவியேற்றுக் கொள்வார்கள். அதேபோல மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதும் இன்று அறிவிக்கப்படும் என்றார்.
உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமாக உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.