லாலு பிரசாத் கவலைக்கிடம்… எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்..!

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரா மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் இருந்து இன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் இதயம் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்காக தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனை ராஜேந்திரா மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் உறுதிபடுத்தியுள்ளார்.

தீவன ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்து வருகிறார். கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து இந்த அறிவிப்பையும் வெளியிட இயலாது என தெரிவித்தது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி இந்த தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்பது உறுதியானது.

இந்த 950 கோடி தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்பது நிரூபணமானது. அவர் மக்களின் பணத்தை கருவூலத்திலிருந்து ஊழல் முறையில் எடுத்துள்ளார். அவரது இந்த ஊழல் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கை பாட்னா நீதிமன்றம் கடந்த 1996-ஆம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைத்தது. 1997-ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.