மதிய உணவு திட்டத்தை உடனே தொடங்குங்கள்… சோனியா காந்தி வலியுறுத்தல்..!

பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தின்போது காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் பேசியதாவது, இந்த கொரோனா பேராபத்து காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகளே. அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்கவில்லை. அதனால், மத்திய அரசு மீண்டும் மதிய உணவு திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். பள்ளிகள் மூடப்பட்டது பின்பு திறக்கப்பட்டது. ஆனால், பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன என்றார்.
மேலும் பேசிய அவர், ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகள் அதிக துயரங்களை இந்த கொரோனா காலத்தில் சந்திக்க நேர்ந்தது. முந்தைய ஆண்டுகளில் இது போன்ற ஒரு பிரச்சனை அவர்களுக்கு ஏற்படவில்லை. மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமானால் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மதிய உணவு அவசியம். மேலும், மதிய உணவு அளிப்பதன் மூலம் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்துவோர் எண்ணிக்கையும் குறையும் என்றார்.