68 தமிழக மீனவர்கள் விடுதலை விவகாரம்… மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 68 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 1974-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தப்படி, கச்சத்தீவுக்கு புனித பயணம் செல்லும் பக்தர்களை, எந்தவித போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் எனவும், இந்திய – இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்றும், அன்னிய நாட்டை இந்த நீதிமன்ற உத்தரவால் நிர்வகிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்திய அரசு ராஜாங்க ரீதியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த தலைமை நீதிபதி, முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு யோசனை தெரிவித்தார். 68 மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.