புதுச்சேரியில் சதமடித்த பெட்ரோல் விலை..!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு புதுச்சேரியில் பெட்ரோலின் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் மீண்டும் பெட்ரோல் விலை இன்று சதமடித்து உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோலின் விலை, லிட்டருக்கு நூறு ரூபாயைக் கடந்து விற்கப்பட்டது. நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் – டீசலுக்கான கலால் வரியை குறைத்ததை அடுத்து புதுச்சேரி அரசும் கலால் வரியை வெகுவாக குறைத்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் பெட்ரோல், டீசலின் விலை வெகுவாகக் குறைந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும், டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் இருந்தது.
இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு, புதுச்சேரியில் மீண்டும் இன்று பெட்ரோலின் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 89 ரூபாய் 60 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.